திருவண்ணாமலை: கரோனா தொற்று இரண்டாவது அலை அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகளைத் தவிர அனைத்து கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மார்க் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் தலைமையில், சந்தவாசல் வனச்சரகர் பி.செந்தில்குமார் உத்தரவின்பேரில் சந்தவாசல் பிரிவு வனவர் பி.ஏழுமலை மற்றும் வனத்துறையினர் நேற்று (மே.10) படவேடு பீட், கோட்டை மலை வழி சரகத்தில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது, சந்தேகதிற்கு இடமளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவர் வயிற்றில் லாரி டியூபில் சாராயம் கடத்தியது தெரிய வந்தது.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில், சாராயம் கடத்தியவர் படவேடு வேட்டகிரிபாளையம் சுப்பிரமணியன் மகன் ரவி (22) என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் 10 லிட்டர் சாராயம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, அவரை போளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு