திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய விழாவான தீபத் திருவிழா நாளை 26ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் கோயில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட இருக்கிறது.
இந்த தீபத்தன்று கிராம மற்றும் நகர் பகுதிகளில் பனை மரத்து பூவில் செய்யப்பட்ட மாவலி சுற்றுவது ஆண்டாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது நாகரீக வளர்ச்சியாலும், வாணவேடிக்கையாலும் இந்த தலைமுறையினர் மாவலி சுற்றுவதை கைவிட்ட நிலையில், இன்னும் சில கிராமத்து இளைஞர்கள் மாவலி சுற்றி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு இளைஞர்கள் மாவலி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை அடுத்த மங்கலம்புதூர் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் ஆண் பனை மரத்தில் மட்டுமே பூக்கும் பூக்களை பறித்து வந்து வெயிலில் உலர்த்துகின்றனர். பின்னர் உலர்ந்து காயவைக்கப்பட்ட பனை மரப்பூவை தரையில் பள்ளம் வெட்டி அவற்றை அதனுள் போட்டு தீயிட்டு எரிக்கின்றனர்.
அந்த பனை மரப்பூ நெருப்பாகும் வரை எரிக்கப்படுகிறது. பின்னர் அந்த பள்ளத்தை மண்ணைக் கொண்டு முடுகின்றனர். மண் இட்டு மூடுவதால் நெருப்பாய் இருந்த பனை மரப் பூ கரியாக மாறுகிறது. அதனை உரலில் இடித்து தூளாக்கி பந்தாக கட்டுகின்றனர். இந்த பந்தினை பனை ஓலையில் குச்சியில் வைத்து கட்டப்பட்டு மங்கலம்புதூர் இளைஞர்கள் மாவலி செய்கின்றனர்.
இதனை கார்த்திகை தீபத் திருநாள் அன்று பூஜை அறையில் வைத்து வழிபாடு நடத்துகின்றனர். வழிபட்ட பின்னர் அந்த மாவலி பந்தின் மீது நெருப்பு வைத்து சுழற்றுகின்றனர். இதனால் நெருப்பு பொறியாக வெளிப்படுகிறது. கார்த்திகை தீபத் திருநாள் மற்றும் அதற்கு மறுநாள் என இரண்டு நாட்கள் மாவலி சுற்றப்படுகிறது. இது சுற்றுவதன் மூலம் தாங்கள் நோய் நொடி இன்றி இருப்பதாக கிராமத்து இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாது, தலைமுறை தலைமுறையாக கார்த்திகை தீபத்தன்று சுற்றப்பட்டு வரும் மாவலி, தற்போது நாகரிக வளர்ச்சியின் காரணமாக பல்வேறு பகுதிகளில் காணாமல் போனதாகவும் இதனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு போக வேண்டும் என்ற நோக்கத்தோடு மாவலி சுற்றுவது ஆண்டுதோறும் தவறாமல் செய்து வருவதாகவும் இக்கிராமத்தைச் சார்ந்த இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: திருவண்ணாமலை தீபத் திருவிழா எதிரொலி - சிறப்பு ரயில்கள் இயக்கம்! தெற்கு ரயில்வேயின் முழு லிஸ்ட்!