திருவண்ணாமலை மாவட்டம் திண்டிவனம் சாலை ரயில்வே கேட் அருகில் உள்ள மல்லிகா பர்னிச்சர், வேலூர் சாலையில் உள்ள ஜேகே ஆட்டோ ஏஜென்சி யமஹா ஷோரூம், காஞ்சி சாலையில் உள்ள ஆர்.பி.எஸ். ஹோண்டா ஷோரூம் ஆகிய நிறுவனங்களில் தொடர்ந்து கடைகளை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து நிறுவனத்தின் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். அரவிந்த் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல் துறையினர் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை தேரடி வீதி பூம்புகார் ஷாப்பிங் சென்டர் எதிரில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை வழிமறித்து கத்தியைக் காட்டி வழிப்பறி செய்ததாகப் புகார் கிடைக்கப்பெற்றதால், காவல் துறையினர் குற்றவாளியை அப்பகுதியில் தேடிவந்தனர்.
அப்போது, திருவண்ணாமலை சமுத்திரம் காலனி சந்திப்பு அருகில் குற்றவாளியை சுற்றிவளைத்துப் பிடித்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில், அவர் திருவண்ணாமலை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பிரபாகரன் (27) என்பதும், மேலும், அவர் தொடர் திருட்டில் ஈடுபட்டுவந்ததும் தெரியவந்தது.
பின்னர், அவரை கைதுசெய்த காவல் துறையினர் அவரிடமிருந்த ஆறு லட்சத்து ஆயிரத்து 200 ரூபாய், இருசக்கர வாகனம், வீச்சரிவாள் ஆகியவற்றைப் பறிமுதல்செய்தனர்.
கடந்த மாதத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற 27 திருட்டுச் சம்பவங்களில், 17 லட்சத்து 67 ஆயிரத்து 130 மதிப்பிலான பொருள்கள் திருடுபோயின.
இதில், 24 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு 10 லட்சத்து 21 ஆயிரத்து 240 ரூபாய் மதிப்பிலான பொருள்கள் காவல் துறையினரால் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.