திருவண்ணாமலை: கிருஷ்ணகிரி அணை மற்றும் பாம்பாறு அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுவதால், சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணையின் பாதுகாப்பை கருதி அணையில் இருந்து வினாடிக்கு 650 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணையின் முழு கொள்ளளவு 119 அடி ஆகும். கடந்த ஒரு வாரமாக பரவலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக, கிருஷ்ணகிரி அணை மற்றும் பாம்பாறு அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சாத்தனூர் அணையில் 116.5 அடி உயரம் தண்ணீர் நிரம்பியுள்ளது. கிருஷ்ணகிரி மற்றும் பாம்பாறு அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றின் வழியாக சாத்தனூர் அணைக்கு 1,250 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், அணையின் பாதுகாப்பைக் கருதி, கடந்த ஒரு வார காலமாக அணையில் இருந்து வினாடிக்கு 650 கன அடி நீர் அணையின் பிரதான 9 ஷட்டர்கள் வழியாக வெளியேற்றப்படுகிறது.
இதையும் படிங்க: “தமிழகத்தில் ஒற்றை பெற்றோர் உள்ள குழந்தைகள் அதிகம்” - தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் பேட்டி!
இதனால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய நான்கு மாவட்ட மக்களுக்கு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றின் வழியாக வெள்ளம் அதிகரித்துச் செல்லும் நிலையில், பாலங்களை பொதுமக்கள் யாரும் கடக்க வேண்டாம் எனவும், பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபடவும், கரையோரம் உள்ள கிராம பொதுமக்களுக்கு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் விளம்பரப்படுத்தி, பாதுகாப்பான இடத்திற்கு பொதுமக்களைச் செல்ல அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “காவிரி நீரை பெற்றுத் தர வேண்டுமென தமிழக அரசு நினைக்கவில்லை” - சீமான்