திருவண்ணாமலை: வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்காத வகையில், '2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வரும் டிச.31 வரை காலம் நீட்டிப்பு செய்ய வேண்டும்' என்றும் ஜிஎஸ்டி வரி என்று வணிகர்கள் துன்புறுத்துவதை நிறுத்தி எளிய முறையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். திருவண்ணாமலை தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு இன்று (மே 21) தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவிகளை அறிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 2017 மற்றும் 2018ஆம் ஆண்டு கணக்கு முடிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை கடை கடையாக நோட்டீஸ் வழங்கி, வட்டி வசூலிப்பதுபோல் பணம் வசூல் செய்து வருகிறது. ஜிஎஸ்டி வரி கட்டக்கூடிய அதிகமான மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்று. வணிகர்களை வஞ்சிக்கும் வகையில் உள்ள ஜிஎஸ்டி சட்ட மசோதாக்களை திருத்த மத்திய அரசுக்கு மாநில அரசுகள் அழுத்தம் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஜிஎஸ்டி வரியால் (GST Tax) வணிகர்களை கொடுமைப்படுத்தாமல் சட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், "மத்திய ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் செல்லாது என்று அறிவித்ததோடு, 2,000 ரூபாய்களை குறுகிய கால கட்டத்திற்குள் வங்கிகளில் செலுத்த வேண்டும் என்று கூறியதாக தெரிவித்தார். குறிப்பாக, நாள் ஒன்றுக்கு 102 ஆயிரம் ரூபாய் வீதம் இருதாயிரம் ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும் எனவும், கடந்த காலங்களில் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் செல்லாது என்ற அறிவித்தது என்று சுட்டிக்காட்டினார்.
ரூ.2,000 நோட்டுகளை மாற்ற கால நீட்டிப்பு தேவை: மக்கள் உணவுக்கு கூட சிரமப்பட்டு கொண்டிருந்த நிலையில், வணிகர்கள் 500 மற்றும் ஆயிரம் ரூபாய்களை பொதுமக்களிடமிருந்து பெற்று வங்கியில் செலுத்தினார்கள். அவ்வாறு வங்கியில் செலுத்திய வியாபாரிகளுக்கு வருவாய் துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டு பல லட்ச ரூபாய்களை அபராதமாக விதித்தனர். இந்த நிலையில், "2,000 ரூபாய் மாற்ற மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள காலக்கெடுவை மாற்றி டிசம்பர் 31ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
பல்வேறு சிறு வணிக நிறுவனங்கள் மற்றும் சிறு சிறு வீடுகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை சிறுசேமிப்புகளாக வைத்துள்ள நிலையில், இதுபோன்ற பணத்தை வங்கியில் செலுத்த மத்திய நிதி அமைச்சர் ரிசர்வ் வங்கியிடம் பேசி கால நீட்டிப்பு செய்து தர வழி செய்ய வேண்டும் என்றார். மேலும் "பொதுமக்கள் 2,000 ரூபாய் நோட்டுக்களை வியாபாரியிடம் வழங்கினால், அதனை பெற்றுக்கொள்ள வேண்டும் என வியாபாரிகள் மற்றும் வணிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கியில் பணம் செலுத்த கால நீட்டிப்பு செய்யவில்லை என்றால் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம் கூடி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
குறிப்பாக, மூன்று லட்சத்து 40 ஆயிரம் கோடி 2,000 ரூபாய் தாள்கள் வெளியே உள்ளதாகவும், அதனை எவ்வாறு உள்ளே கொண்டு வர வேண்டும் என்ற நோக்கம் தான் தன் மனதில் உள்ளதாகவும் 2,000 ரூபாய் தாள்களை மாற்றுவதை எவ்வித சிக்கல்கள் இல்லாமல் வணிகர்களும் பொதுமக்களும் மாற்ற மத்திய மாநில அரசுகள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வட போச்சே!.... 'வெட்டி பந்தா' பாஜக நிர்வாகியின் அலப்பறை! காமெடி ஸ்டோரியின் பின்னணி என்ன?