திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கரியமங்கலம் ஊராட்சியில் கரோனா தொற்று காரணமாக, கடந்த மூன்று மாதங்களாக வீட்டிலேயே முடங்கியிருந்த பொதுமக்களுக்கு ஆறுதலாக, தற்போது தேசிய ஊரக வேலைவாய்ப்புத் உறுதி திட்டத்தின்கீழ், நூறு நாள் வேலை பகுதி வாரியாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சுமார் 20-க்கும் மேற்பட்டோருக்கு பணி வழங்க மறுக்கப்பட்டது. விசாரணையில், அவர்களுக்கு வழங்கிய நூறு நாள் அட்டை போலி என்பதால், பணி வழங்க மறுக்கப்பட்டதாகவும்; இந்த போலி நூறு நாள் அட்டையை பணித்தள பொறுப்பாளர் வசந்தா கையூட்டு பெற்றுக்கொண்டு வழங்கியதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.
மேலும் தற்போது இந்த அட்டை செல்லாது என அவரே தட்டி கழித்ததால், ஆத்திரமடைந்த தொழிலாளர்கள், பணித்தள பொறுப்பாளர் வசந்தாவை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் அதிகமானதை அடுத்து வசந்தா அங்கிருந்து தப்பி ஓடியதால் பரபரப்பு நிலவியது. எனவே, ஒன்றிய நிர்வாகம் தங்களுக்கு புதிய அட்டை வழங்கி, பணி வழங்கிட வேண்டுமென மக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வேலை இழந்த பெண்களுக்கு கைகொடுத்த நிறுவனம்!