திருவண்ணாமலையில் மாதம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கிரிவலப்பாதையில் 365 குளங்கள் இருந்ததாக தல புராணங்களில் உள்ளன. ஆக்கிரமிப்புகள் தவிர தற்போது உள்ள 25-க்கும் குறைவான குளங்கள் தூர்வாராமல் பராமரிப்பின்றி உள்ளன.
இறந்தவர்களின் உடல்களை கிரிவலப்பாதையில் புதைத்தால் முக்தி கிடைக்கும் என மக்கள் நம்புவதால் உடலை அடக்கம் செய்யும் பழக்கம் அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலை நகரில் இருப்பவர்களின் உடல்களை கிரிவலப்பாதையில் உள்ள ஈசான்ய மயானம், எமலிங்கம் அருகே அடக்கம் செய்கின்றனர். வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இறந்தவர்களின் உடலை ஆம்புலன்ஸில் கொண்டுவந்து நகராட்சி அனுமதி பெறாமலேயே அடக்கம் செய்கிற பழக்கமும் உள்ளது. இந்த உடல்கள் இயற்கையாக உயிர் இழந்தவர்களுடையதா அல்லது கொலை செய்யப்பட்டு இங்கே கொண்டுவந்து புதைக்கப்படுகின்றனவா என்பது கூட தெரியாமல் புதைக்கப்படுகின்றன.
500 ரூபாய் கூலி கொடுத்தால் போதும் உடலைப் புதைக்க தொழிலாளிகள் குழிதோண்டி கொடுக்கும் நிலை உள்ளது. மாதத்திற்கு 50 முதல் 60 உடல்கள் வரை புதைக்கப்பட்டு சமாதி கட்டப்பட்டுவருகிறது.
இதனை கிரிவலம் செல்வோர் சித்தர்கள் சமாதி என்று கருதி வழிபடும் அவலமும் நடைபெற்றுவருகிறது. சமாதிகள் அதிகரிப்பால் உடல்களை புதைக்க இடமின்றி அங்குள்ள குளங்களில் புதைத்துவரும் அவலமும் நடந்தேறிவருகிறது.
இதனை நகராட்சி நிர்வாகமும் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. குளங்களில் உடல்கள் புகைப்பதை தடுக்க வேண்டும், திருவண்ணாமலை கிரிவலப் பாதையின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்பதே பக்தர்கள், பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.