திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கொம்மனந்தல் பகுதியில் தரணி சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்த கரும்புக்குத் தரவேண்டிய நிலுவைத் தொகை ரூபாய் 55 கோடியை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் அக்டோபர் மூன்றாம் தேதி போளூரில் அரை நிர்வாணத்துடன் தமுக்கடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் எதிரொலியாக, ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் மைதிலி முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கரும்பு விவசாயிகளுக்கு தீபாவளிக்கு முன்பாக நிலுவைப்பணம் முழுவதும் தருவதாக ஆலை நிர்வாகம் சார்பில் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் தரப்பட்டது.
பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டது போல் ஆலை நிர்வாகம் தீபாவளிக்குள் நிலுவை தொகையை வழங்காததால் ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தரணி ஆலையின் முன்பு ஒன்றுகூடி மனு கொடுத்து பணம் பெறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த போளூர் தாசில்தார் ஜெயவேல் மற்றும் டிஎஸ்பி குணசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த 15 தினங்களுக்குள் கரும்பு நிலுவைத் தொகையில் ஒரு பகுதி வழங்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் தனியார் சர்க்கரை ஆலை அமைந்துள்ள அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
இதையும் படிங்க : உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர் பெயர் திருத்த கால அவகாசம் நீட்டிப்பு!