திருவண்ணாமலை கிரிவல பாதையில் அமைந்துள்ள ரமணாஸ்ரமத்தில் நேற்று (டிச.31) ரமணரின் 141ஆவது ஆண்டு ஜெயந்தி விழா நடைபெற்றது. மதுரையை அடுத்த திருச்சுழி கிராமத்தில் 1879ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்த இவர், சிறு வயதிலேயே நாயன்மார்களின் கதைகளை கேட்டு வளர்ந்தவர்.
மாம்பழப்பட்டு என்ற ஊரில் இருந்து திருக்கோவிலூர் வழியாக நடந்தே 1896ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி திருவண்ணாமலை வந்தடைந்தார். அங்குள்ள குளத்தில் மூழ்கி தான் கட்டியிருந்த வேட்டியில் கோவணம் என்ற அளவுக்கு துணியைக் கிழித்து எல்லாவற்றையும் குளத்தில் வீசியெறிந்தார். எவரிடமும் தீட்சை பெறாமல் தன்னைத் தானே துறவியாக ஆக்கிக் கொண்டார்.
துறவிகளுக்கு உரிய அடையாளமான வெறும் கோவணத்தை மட்டுமே ஆடையாகக் கொண்டு, மௌன மொழியையே பேருரையாக வழங்கி, உலக மக்களால் ஈர்க்கப்பட்டு, 'பகவான்' என்றும், 'கடவுளின் அவதாரம்' என்றும் உயிர்ப்போடு அழைக்கப்பட்ட ஒரே மகான் ஸ்ரீரமண மகரிஷி. தத்துவங்களால் அனைவரையும் கவர்ந்த ரமணர் கடந்த 1950ஆம் ஆண்டு முக்தியடைந்தார்.
அவரது ஜீவசமாதி அவரால் தொடங்கப்பட்ட ரமணாஸ்ரமத்தில் உள்ளது. இந்நிலையில், ரமணரின் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் ரமணாஸ்ரமத்தில் ரமணர் பிறந்த நட்சத்திரத்தன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி, ரமணர் அவதரித்த மார்கழி புனர்வசு நட்சத்திர தினமான நேற்று (டிச.30) 141ஆவது ஜெயந்தி விழா ரமணாஸ்ரமத்தில் நடந்தது. அதிகாலை மங்கள இசை, தமிழ்ப் பாராயணம் நடந்தது. அதனைத்தொடர்ந்து ரமணருக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. ரமணரின் ஜெயந்தி விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை ஆராதனையும் நடைபெற்றது.
இதையும் படிங்க: புத்தாண்டு கொண்டாட்டம் ஊட்டியில் தடை விதிப்பு: மீறினால் கடும் நடவடிக்கை