திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு - சுவேதா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். திருநாவுக்கரசு கட்டிடத் தொழிலாளி பணியை செய்து வரும் இவருக்கு மது அருந்தும் பழக்கமுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த நான்கு நாட்களாக திருநாவுக்கரசு அதிகளவு மது குடித்து வந்ததால், கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
இதில் மனமுடைந்த சுவேதா நேற்று (ஜன.18) நண்பகல் 3:30 மணியளவில் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரை மீட்ட உறவினர்கள் நேற்று மாலை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நேற்று மாலை முதல் சிகிச்சை பெற்று வந்த சுவேதா இரவு 9 மணிக்கு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறவினர்களிடம் தெரிவித்து உள்ளனர்.
அதன் பின் இரவு 11 மணியளவில் சுவேதா உயிரோடு இருப்பதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு மேல் சுவேதா மருத்துவர்கள் இறந்துவிட்டதாக உறவினர்களிடம் மீண்டும் கூறியுள்ளனர். இதனால் இன்று காலை சுவேதாவின் உறவினர்கள் வேட்டவலம் காவல் நிலையத்தில் இறப்பில் எந்த சந்தேகமும் இல்லை என்று சான்று வாங்கி வருவதற்காக சென்றுள்ளனர்.
அப்போது மீண்டும் சுவேதா உயிரோடு உள்ளதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக உறவினர்களிடம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களிடம் கேட்டதற்கு சுவேதா நேற்றிரவே இறந்து விட்டதாகவும், சி.பி.ஆர் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது வெண்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், 5 மணி நேரம் கழித்தால் மட்டுமே அவரது நிலை தெரியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ரமணா திரைப்பட பாணியில் பெண் இறந்துவிட்டார் என்று கூறிவிட்டு, மீண்டும் உயிரோடு உள்ளதாக தெரிவித்து சிகிச்சை அளித்து வரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையால் சுவேதாவின் உறவினர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதையும் படிங்க: சாலையோர வியாபாரி மீது மோதிய லாரி; பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்!