திருவண்ணாமலை: கண்ணக்குறுகை அடுத்த சி.குப்பந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அனைத்து சமுதாயத்தை சார்ந்த 42 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பணி மாறுதலால் சி.குப்பந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர் வெங்கடாசலம் என்பவர், மாணவ - மாணவிகளிடம் ’நீ என்ன சாதி’ என சாதியைப் பற்றி கேட்பதாக மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.
உடனடியாக பள்ளிக்குச் சென்ற பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் இது குறித்து புகார் தெரிவித்து பள்ளியில் படிக்கும் தங்களது பிள்ளைகளை வகுப்பை புறக்கணித்து, பள்ளியில் இருந்து அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவம் குறித்து அறிந்து வந்த வட்டார கல்வி அலுவலர் செல்வம், பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஆசிரியர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் ஆசிரியர் வெங்கடாசலம் கடந்த ஆண்டு நெடுங்காவடி அரசு பள்ளியில் படிக்கும் மாணவனை ’மாட்டிறைச்சி உண்டு கொழுத்து உள்ளாய்’ என பேசியதற்கு பணி மாறுதல் செய்யப்பட்டு அவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பள்ளிகளில் ’சாதிகள் இல்லையடி பாப்பா’ என கற்றுத் தரும் ஆசிரியரே மாணவ, மாணவிகளிடம் சாதி எனும் நஞ்சை விதைப்பது கொடூரமான செயலாக உள்ளது என பெற்றோர்கள் வேதனை அடைந்து வருகின்றனர். இது போன்ற ஆசிரியர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.