திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த முளகிரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (55) . இவரது மனைவி பார்வதி (50) . இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகனுக்கு திருமணமாகி குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். மகளுக்கும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார்.
சங்கர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மனைவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் (ஏப். 24) இரவு பார்வதியிடம் குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சங்கர், மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு எரித்துக் கொலை செய்துவிட்டு, தன்மீதும் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
பின்னர், சங்கர் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து, தகவலறிந்த காவல் துறையினர் மருத்துவமனைக்குச் சென்று சங்கரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது , குடிக்க பணம் தர மறுத்ததால் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு, தானும் தீக்குளித்ததாக அவர் வாக்குமூலம் அளித்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதனிடையே, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, அனக்காவூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.