திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று, சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் 100 விழுக்காடு வாக்களிப்பதன் அவசியம் குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு குறும்படங்கள் மூலம் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மூன்று நடமாடும் எல்இடி காணொலி வாகனங்களை மாவட்டத் தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. முத்துகுமரசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து, மாவட்டத் தேர்தல் அலுவலர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் 24 மணி நேரம் செயல்பட்டுவரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள், புகார்கள், விவரங்கள் தொடர்பாகப் பொதுமக்கள் 24 மணி நேரமும் தேர்தல் கட்டுபாட்டு அறைக்கு '1950', '1800-4255672' ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.
மாவட்டத் தேர்தல் அலுவலர் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் 'C-VIGIL' கைப்பேசி செயலி மூலம் அனுப்பப்படும் தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கை குறித்து ஆய்வுசெய்தார்.
மேலும், தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் பறக்கும் படை குழு வாகனங்கள், நிலை கண்காணிப்புக் குழு வாகனங்கள், ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்பட்டுவருவதையும் ஆய்வுசெய்தார்.
இதையும் படிங்க...வாக்கு மையங்களில் கேமரா பொருத்தும் பணி: முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தலைமைத் தேர்தல் அலுவலர் சுற்றறிக்கை