திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான தரை காடுகள் உள்ளன. இதில் அரிய வகையான புள்ளிமான், காட்டுப்பன்றி, காட்டு எருமை, முயல், மயில், புனுகு பூனை போன்றவை உள்ளன. இதனை சட்டவிரோதமாக உள்ளூர், வெளி மாவட்டங்களில் வேட்டையாடிய இறைச்சிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுவருவது வாடிக்கையாக உள்ளது.
இதனை தடுக்கும் நோக்கில் செங்கம் சரக வனத்துறையினர், செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தரை காடுகள், அடர்ந்த வனப் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றிரவு கட்டமடுவு பகுதியைச் சேர்ந்த மூன்று நபர்கள் கள்ளத்துப்பாக்கி உடன் மேல்ராவந்தவாடி வனப்பகுதியில் சுற்றித்திரிவதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சிறப்பு குழு அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது வனவிலங்கை வேட்டையாட துப்பாக்கியுடன் வனப் பகுதியில் இருந்த மூன்று நபர்களையும் சுற்றி வளைத்தனர். தொடர்ந்து கட்டமடுவு பகுதியைச் சேர்ந்த மைசுதா (46) என்பவரை கைது செய்தனர். மேலும் உடன் இருந்த மற்ற இரண்டு நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
பத்து பேர் கொண்ட குழு அமைத்து வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது மூன்று நபர்களை சுற்றிவளைத்து கைது செய்யப்பட்ட நிலையில் அதில் ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டு, இருவரை தப்பிக்கவிட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் வனத்துறையினர் மற்ற இரண்டு நபர்களிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு அவர்களை தப்பிக்க விட்டனரா? என வனத்துறையினர் மீது சந்தேகம் எழுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்
எனவே மாவட்ட வனத்துறை அலுவலர் வனப்பகுதியில் எத்தனை நபர்கள் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்தார்கள் என கண்டறிந்து அவர்களையும் கைதுசெய்து வனத்தில் உள்ள விலங்குகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: செல்லப்பிராணிகள் விற்பனைக்கு அனுமதி கட்டாயம் - ஆர்வலர்கள் வரவேற்பு!