திருவண்ணாமலை: அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இயக்குநர் கம்பன் செய்தியாளர்கள் சந்திப்பில், ”அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 3 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடைபெற்று கல்லூரி செயல்பட்டு வருகிறது. அருணை மருத்துவக் கல்லூரியில் மருத்துவத் துறையில் பல்வேறு துறைகள் ஆரம்பிக்கப்பட்டு, ஒவ்வொரு துறையிலும் துறை சார்ந்த வல்லுநர்கள் பணி அமர்த்தப்பட்டு சிறப்பாக மருத்துவ சேவை செய்து வருகின்றனர்.
நாட்டில் உள்ள முக்கிய நோய்களில் மனிதர்கள் இதய நோயால் அதிகம் உயிரிழக்கக் கூடிய சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது. வயது வித்தியாசம் இன்றி இந்த நோயால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். பின்தங்கிய மாவட்டமான திருவண்ணாமலையில் இதய நோய் சிகிச்சை தொடர்பான மருத்துவமனையில் ஆரம்பிக்க வேண்டும் என்ற நோக்கில் இதய அறுவை சிகிச்சை அரங்கம் துவங்கப்பட்டுள்ளது.
ஐந்து நபர்களுக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதய அறுவை சிகிச்சை என்பது சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பெரு நகரங்களில் மட்டும் செய்யப்படக்கூடிய நிலையில், தற்போது திருவண்ணாமலையில் துவங்கப்பட்டு சிறப்பாக 5 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது’ என மருத்துவக் கல்லூரி இயக்குநர் தெரிவித்தார்.
மேலும் மார்ச் 1ம் தேதி முதல் முழு உடல் பரிசோதனை முகாம் துவங்கப்பட்டு சுமார் 20,000 நோயாளிகள் பயன் அடைந்து இருப்பதாகவும், இதய பிரச்னை சம்பந்தமாக வரக்கூடிய நோயாளிகளுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்படும் என்றும், இதய அறுவை சிகிச்சை மே மாதம் முழுவதும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இயக்குநர் கம்பன் தெரிவித்தார்.
மேலும் தற்போது தமிழ்நாடு அரசின் மூலம் வழங்கப்படும் முதலமைச்சரின் காப்பீடுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சிகிச்சைகளுக்கு உரிய முறையில் விண்ணப்பித்திருப்பதாகவும், அந்த அனுமதி கிடைத்தவுடன் காப்பீடு திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் அனைத்து சிகிச்சைகளும் ஏழை மக்களுக்குப் பயன்படும் வகையில் சிறப்பான சேவையை தொடர்ந்து அருணை மருத்துவக் கல்லூரி செய்யும் என மருத்துவமனையின் இயக்குநர் கம்பன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
இதையும் படிங்க: அமைச்சர் உதயநிதி தொகுதியில் பள்ளிக்கூடம் கட்டி தருவதாக மோசடி - சுட்டிக்காட்டும் அறப்போர் இயக்கம்