திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட படவேடு கிராமத்தில் ரேணுகாம்பாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில், குமார் என்பவர் கட்டடம் கட்டி செல்வமூர்த்தி என்பவரிடம் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 9 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுக்கொண்டு 3000 என மாத வாடகைக்கு கடையை விட்டுள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு குமார் உயிரிழக்கவே, அவரது மகனான ராமு இந்த கடையை தங்களிடம் ஒப்படைக்குமாறு செல்லமூர்த்தியிடம் கேட்டுள்ளார். குறிப்பாக, ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி இந்த கடை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால், கடையை ஒப்படைக்காமல் செல்வமூர்த்தியின் மகன்கள் ஜீவா மற்றும் உதயா ராமுவிடம் தகறாரில் ஈடுபட்டதோடு, கத்தியால் ராமுவை தலையில் தாக்கியுள்ளனர். இதில், காயமடைந்த ராமுவை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக தன் மனைவியை அடித்து துன்புறுத்தியதாக ராணுவத்தில் பணியாற்றும் பிரபாகரன் என்பவர் தனது குடும்பத்தாருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வீடியோ பதிவு வெளியிட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் முதற்கட்ட விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், ராணுவ வீரரின் மனைவிக்கு எவ்வித தீங்கும் நேரவில்லை என மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மனைவியை தாக்கியதாகவும் அவருக்கு பாதுகாப்பு வழங்கவும் வேண்டுமென வீடியோ வெளியிட்ட ராணுவ வீரர் இவையனைத்து திட்டமிட்டு செய்திருப்பாக தனது நண்பருடன் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் பேசியதாக பரவும் அந்த ஆடியோவில், 'பாதிக்கப்படாமல் பாதிக்கப்பட்டதாக தான் செய்துள்ள காரியம் தமிழ்நாடு அளவில் பெரியதாக பேசப்படும் என்றும், நான் காணொலி வெளியிட்டுள்ளேன். நமக்கு ஆதரவாக சில அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கவுள்ளதாகவும், நடந்ததை இரண்டு பங்காக சொல்லுங்கள் என்றும், தான் வெளியிட்ட வீடியோவை சுமார் ஆறு கோடி நபர்களுக்கும் மேல் பார்த்துள்ளனர் எனவும், எங்கு சென்றாலும் ஒன்றுக்கு இரண்டாக பேச வேண்டும்' என்பனவாறு அந்த ஆடியோவில் அவர் பேசியுள்ளார்.
இதனிடையே, வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராணுவ வீரரின் மனைவி கீர்த்தியை, மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி மற்றும் சீதாபதி சொக்கலிங்கம் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தியதோடு, ராணுவ வீரரின் மனைவி கீர்த்திக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகளிர் ஆணைய தலைவர் குமரி 'திருவண்ணாமலை மாவட்டம், படவேடு கிராமத்தில் ராணுவ வீரரின் மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் கண்டு தெரிந்துகொண்டதாகவும், இதனையடுத்து மாநில மகளிர் ஆணையம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இது குறித்து விசாரித்ததாக கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறியதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக, பாதிக்கப்பட்ட இப்பெண்ணிற்கு 24 மணி நேரமும் காவல் துணை ஆய்வாளர், மூன்று காவலர்கள் பாதுகாப்பிற்காக உடனிருப்பதாகவும் அவர் கூறினார். இதனைத்தொடர்ந்து, மருத்துவனை நிர்வாகத்திடம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் பேசிய நிலையில், எல்லா துறைகளையும் சேர்ந்த மருத்துவர்கள் குழுவாக அவரை பரிசோதித்துள்ளதாகவும், அவருக்கு சிடி ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளையும் அளித்துள்ளதாகவும், அவர் உடல்நலம் நன்றாக இருப்பதாகவும் அவர் பேசியுள்ளார். இந்த விவகாரத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
மகளிர் ஆணையத்தின் கடமை என்ற விதத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாப்பு குறித்து தெரிந்துகொள்ளவதற்காக வந்திருப்பதாக கூறினார். மேலும், நடந்தவைகள் குறித்து அப்பெண் தெரிவித்தவைகளை நாங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விளக்க உள்ளோம் என்றார். இதனையடுத்து அடுத்தக்கட்ட விசாரணை என்னவென்று காவல்துறை தரப்பில் ஆணையத்திடம் தெரிவிக்கும் என்றார்.
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தொடர்ந்து பாதுகாப்பு அளிக்க பரிந்துரைத்துள்ளதாகவும், காஷ்மீரிலிருந்து வந்துகொண்டு இருக்கும் அவரது கணவர் பிராபகரனையும் சந்திக்க உள்ளதாக அவர் கூறினார். அதேநேரத்தில், இது கடை சம்பந்தமாக எழுந்த பிரச்னையே என்றும்; இந்த விவகாரத்தில் இருதரப்பையும் சரியாக விசாரிப்பது தான் நல்லது என்றும் அவர் தெரிவித்தார். இதனிடையே, பாதிக்கப்பட்டவர் பெண் என்பதனால் தான், உடனடியாக அவருக்கு பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம்' என்றார்.
இதையும் படிங்க: ராணுவ வீரரின் வீடியோ விவகாரம்: திருவண்ணாமலையில் இருவர் கைது!