திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடியது, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இந்த நிலையில் நேற்று (அக் 25) மாலை 5 .17 மணி முதல் 6. 24 மணி வரை சூரிய கிரகணம் தோன்றியது. இதனால் உலகில் உள்ள மற்ற அனைத்து கோயில்களிலும் நடை சாத்தப்படுவது வழக்கம்.
ஆனால், இங்குள்ள அண்ணாமலையார் சுயம்புவாக இருப்பதால், இந்த கோயிலில் நடை சாத்துவது வழக்கம் கிடையாது. மேலும் இந்த கோயிலில் சூரிய கிரகணம் ஆரம்பிக்கும் முன்பும், சந்திர கிரகணம் முடிந்த பின்பும் தீர்த்தவாரி நடைபெறுவது சிறப்பாகும். எனவே சூரிய கிரகணத்தை முன்னிட்டு அண்ணாமலையார் கோயில் மூடப்படவில்லை.
இதனிடையே சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, அண்ணாமலையாரின் அம்சமான அஸ்திர தேவதையை பிரம்ம தீர்த்த குளக்கரையில் எழுந்தருளச் செய்து, சரியாக 5.17 மணியளவில் பிரம்ம தீர்த்த குளக்கரையில் மகா தீர்த்தவாரி நடைபெற்றது இதனைத்தொடர்ந்து அஸ்திர தேவதைக்கு பச்சரிசி மாவு, அபிஷேக பொடி, பால், தயிர், விபூதி மற்றும் சந்தனம் உள்ளிட்டவற்றைக் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது.
இறுதியாக சிறப்பு பூஜை செய்த புனித கலச நீரை ஊற்றி, சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, பஞ்ச கிளை என்று அழைக்கப்படுகின்ற மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: சூரிய கிரகணம்: ஆட்டுக்கல்லில் உலக்கை வைத்து அறிந்துகொள்ளும் கிராமம்