திருவண்ணாமலை: வந்தவாசி அடுத்த நெடுங்கல் கிராமம் அருகே கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த திண்டிவனம் வட்டாட்சியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பண்ருட்டியைச் சேர்ந்த வெங்கடசுப்பிரமணியம் என்பவர் திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் வட்டாட்சியர் வெங்கடசுப்பிரமணியம் அவரது மனைவி பூங்கோதை மற்றும் மகன் சிவசங்கரன் ஆகிய 3 பேர்கள் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்தவாசி வழியாக திண்டிவனம் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மேல்மருவத்தூரில் இருந்து காஞ்சிபுரத்திற்குப் பால் ஏற்றிச் சென்ற லாரி வந்தவாசி அடுத்த நெடுங்கள் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது இதில் காரில் பயணம் செய்த வட்டாட்சியர் வெங்கடசுப்பிரமணியம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று வட்டாட்சியரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த தாசில்தாரின் மனைவி மற்றும் மகன் ஆகிய 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தகவல் அறிந்த திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவிதேஜா சம்பவ இடத்திற்குச் சென்று தாசில்தாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கீழ்நமண்டி அகழாய்வு பணிகள் துவக்கம் - காணொலி மூலம் முதலமைச்சர் துவக்கி வைத்தார்!