திருவண்ணாமலை மாவட்டத்தில் போலி மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல் கண்காணிப்பாளர் எஸ். அரவிந்துக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இந்தத் தகவலின் அடிப்படையில், மதுவிலக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் பழனி தலைமையில், மதுவிலக்கு காவல் துறையினர் சேத்துப்பட்டு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆனைமங்கலம் கிராமத்தில், ஏழு அட்டைப்பெட்டிகளில் போலி மதுபான பாட்டில்கள் கடத்திச்சென்ற மூவரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் சேத்துப்பட்டு தாலுகாவைச் சேர்ந்த வேலு (34), மகேந்திரன் (39), மேல்மலையனூர் தாலுகாவைச் சேர்ந்த குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.