திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் சட்டவிரோதமாக லாட்டரிச் சீட்டு விற்பனை நடைபெறுவதாக காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்துக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில் லாட்டரிச் சீட்டு விற்பனை செய்பவர்களைக் கைது செய்ய போளூர் டிஎஸ்பி அறிவழகனுக்கு உத்தரவிட்டார்.
எஸ்பி உத்தரவின்பேரில் டிஎஸ்பி தலைமையிலான காவல் துறையினர், போளூர் பேருந்து நிலையத்தின் அருகே அமைந்துள்ள கடையில் ஆய்வு செய்தபோது, அஸ்ஸாம் மாநிலத்தைச் சார்ந்த லாட்டரிச் சீட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததைக் கண்டறிந்தனர்.
இதையடுத்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில் விழுப்புரம் மாவட்டம், பென்னகர் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ்(34), திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பகுதியைச் சேர்ந்த வைகுந்த்(27), ஏழுமலை(47) என்பது தெரியவந்தது.
பின்னர், அவர்களைக் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 4 ஆயிரத்து 47 லாட்டரிச் சீட்டுக்களையும், 7 ஆயிரத்து 40 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, இவர்கள் மீது போளூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.