திருவண்ணாமலை நகராட்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்த சில நாள்களாக அதிக எண்ணிக்கையில் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அப்பகுதி வியாபாரிகள் தாமாக முன்வந்து கடைகளை அடைப்பதாக தெரிவித்துள்ளனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நோக்கில் இன்று முதல் வரும் 30ஆம் தேதிவரை தொடர்ந்து 10 நாள்களுக்கு வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படுவதாக அறிவித்துள்ளனர். வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கரோனா நோய் தொற்று பரவக்கூடாது என்கிற நல்லெண்ணத்தின் அடிப்படையில் முழு கடையடைப்பு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திருவண்ணாமலை தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்க உத்தரவுப்படி நகரில் உள்ள பஜார் வீதி, தேரடி வீதி, திருமஞ்சன கோபுரம் வீதி உள்ளிட்ட அனைத்து வீதிகளிலும் உள்ள உணவகங்கள், தேநீர் கடை, ஜவுளி கடை, நகைக்கடை, பேக்கரி, மளிகைக்கடை உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டன.