தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பாக திருவண்ணாமலை மாவட்ட அனைத்து சங்க நிர்வாகிகள் கூட்டம் மாவட்டத்தின் தலைவர் மண்ணுலிங்கம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளோம். அதில், திருவாரூரில் நடைபெறவுள்ள 37ஆவது வணிகர் சங்க மாநில மாநாட்டில் 5 ஆயிரம் பேர் கலந்துகொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே போல், திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சித் துறை அலுவலர் வள்ளி என்ற பெண் மிகக்கடுமையாக வணிகர்களையும், பொதுமக்களையும் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
குறிப்பாக வீடுகளுக்கு குடிநீர் கட்டணம் வசூலிப்பு என்கின்ற முறையில் குடிநீர் இணைப்பு இல்லாத வீடுகள், கடைகளுக்கு கட்டாயமாக பணம் வசூல் செய்வதாக கூறப்படுகிறது. மேலும் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று கூறி, பொதுமக்களால் செலுத்த முடியாத கட்டணத்தை, செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத கட்டணத்தை, தேவையில்லாமல் ஏற்றிக்கொண்டு, பொதுமக்களின் வீடு முன்பு நின்றுகொண்டு, கந்து வட்டி வசூலிப்பது போல் வசூல் செய்கின்றார்.
இதனை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது. அதேபோல், அமைச்சரைப் பார்த்துவிட்டால் போதுமா என்னிடம்தான் மீண்டும் வரவேண்டும் என்று அந்தப் பெண்மணி ஆதங்கத்தோடு கூறுவதை பார்த்து பொதுமக்கள் மிகவும் அச்சம் அடைகின்றனர்" என்றார்.
இதையும் படிங்க:தள்ளாடும் வயதிலும் உழைப்பை நம்பி வாழும் தம்பதி.!