திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூர் அடுத்த கீக்களூர் அரசு உயர்நிலை பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் 130க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி எட்டாம் வகுப்பு மாணவர்களிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் செவரப்பூண்டியைச் சேர்ந்த மாணவர்களை பள்ளி விட்டு ஊருக்கு சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு தரப்பைச் சேர்ந்த மாணவர்களின் உறவினர்கள் மாணவர்கள் நான்கு பேர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் மாணவர்களின் வீட்டிற்குச் சென்று மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கீக்களூர் அம்பேத்கார் நகர் தெருவை சேர்ந்த ராஜீவ்காந்தி என்பவரை கடந்த 25 ஆம் தேதி கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்து உள்ளனர். மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தால் அச்சத்தில் இருக்கும் பெற்றோர்கள், செவரப்பூண்டி கிராமத்தில் இருந்து கீக்களூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சென்று பயிலும் 35 மாணவர்கள் யாரையும் பள்ளிக்கு அனுப்பாமல் உள்ளனர்.
இதன் காரணமாக கடந்த நான்கு நாட்களாக மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் செவரப்பூண்டியைச் சார்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் டிசியை வழங்குமாறு கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
அதன் பேரில் மாவட்ட கல்வி அலுவலர் இஸ்மாயில் கீக்களூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வந்து பெற்றோர்களிடம் முன்னதாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மாணவர்களின் படிப்பு கேள்விக் குறியாய் இருக்கும் நிலையில் கீக்களூர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மல்லி, கீழ்பென்னாத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கோவிந்தசாமி, கீக்களூர் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா சுந்தரமூர்த்தி கிராம நிர்வாக அலுவலர் மதியழகன் ஆகியோர் மாணவர்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து பள்ளியில் மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை உருவாகி தரப்படும் என தலைமை ஆசிரியரும், மாணவர்கள் வீடு திரும்ப காவல்துறை மூலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் எனவும் உத்தரவாதம் அளித்துள்ளனர். இருப்பினும் மாணவர்களின் பெற்றோர்கள் அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர்.
செவரப்பூண்டி கிராமத்தை சேர்ந்த 35 மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில் இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் மாணவர்களின் பெற்றோர் இடம் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் அவர்களுக்கு பள்ளியிலும் பள்ளிக்கு வெளியேயும் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கும் சமூக ஆர்வலர்கள் மாணவர்களின் இவ்வாண்டு கல்வி படிப்பு எவ்வித காரணத்தாலும் தடை ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: அரசு பள்ளியில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 35 மாணவர்கள் டிசி வாங்க முடிவு.. திருவண்ணாமலையில் நடந்தது என்ன?