திருவண்ணாமலை: பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் கார்த்திகை தீபத் திருவிழா கொடியோற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் பத்தாம் நாளான நாளை டிச.6ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலின் கருவறையில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
இதற்காக, தீபம் ஏற்றப்பட உள்ள கொப்பரைக்கு அண்ணாமலையார் கோயில் கிளி கோபுரம் அருகே சிறப்பு பூஜைகள் நடைபெற்று, அண்ணாமலையார் கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது கொப்பரை எடுத்துச்செல்லும் பணி மேற்கொள்ளப்பட்டது.
மலை மீது ஏற்றப்படவுள்ள தீபத்திற்கு, தீப கொப்பரையில் 4500 கிலோ நெய் நிரப்பி சுமார் ஆயிரத்து 150 மீட்டர் காடா துணி பயன்படுத்தி, பர்வத ராஜ குலத்தைச் சேர்ந்தவர்களால் நாளை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படவுள்ளது. 6ஆம் தேதி ஏற்றப்படும் தீபம் தொடர்ந்து 11 நாள்கள் வரை நின்று எரியும்.
அதன் பின்னர் தீப கொப்பரை அண்ணாமலையார் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு, கொப்பரையில் இருந்து நெய் சேகரித்து அதனுடன் பல்வேறு மூலிகைகள் மற்றும் வாசனை திரவியங்கள் சேர்த்து ஆருத்ரா தரிசனத்தின் போது நடராஜருக்கு நெற்றியில் திலகமிட்டு, பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
இதையும் படிங்க: தீபத்திருவிழா: திருவண்ணாமலைக்கு 894 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு