திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் சித்திரை முதல் பங்குனி மாதம் வரையிலான 12 மாதங்களில் நடக்கும் முக்கிய தீர்த்தவாரிகளில், தை மாதம் அமாவாசை முடிந்து ஏழாம் நாள் நடக்கும் ரதசப்தமி தீர்த்தவாரியும் ஒன்று. இந்நாளில் சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் வடக்கு நோக்கித் திரும்புவதாக ஐதீகம்.
இந்த புனித நாளின் சிறப்பை உணர்த்தும் விதமாக அண்ணாமலையார் உடன் உடனுறை உண்ணாமுலையம்மன் பங்கேற்கும் ரதசப்தமி தீர்த்தவாரி கலசப்பாக்கம் செய்யாற்றில் நடைபெறும். அந்த வகையில் நேற்று (ஜன 28) அண்ணாமலையார் கோயிலில் இருந்து அண்ணாமலையார் உடன் உடனுறை உண்ணாமுலையம்மன் புறப்பட்டு, கலசப்பாக்கம் செய்யாற்றில் தீர்த்தவாரிக்கு சென்றார்.
வழிநெடுகிலும் பக்தர்கள் அண்ணாமலையார் மற்றும் உடனுறை உண்ணாமுலையம்மனை சூடம் ஏற்றி வழிபட்டனர். முன்னதாக அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான வேலூர் சாலையில் உள்ள தனக்கோடிபுரம் பகுதிக்குச் சென்று அங்கு அண்ணாமலையாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள வயல்களை பார்வையிட்டார்.
பின்னர் 12 மணிக்கு மேல் கலசப்பாக்கம் செய்யாற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. இந்தத் தீர்த்தவாரியில் அண்ணாமலையார் உடனுறை உண்ணாமுலையம்மன் உடன் கலசப்பக்கத்தில் வீற்றிருக்கும் திருமாமுடீஸ்வர் உடனுறை திரிபுரசுந்தரி அம்பாளுடன் தீர்த்தவாரியில் பங்கேற்றனர். இவர்கள் இன்று (ஜன 29) மீண்டும் அண்ணாமலையார் கோயிலுக்குத் திரும்புகிறார்கள்.
ரதசப்தமி தீர்த்தவாரியில் கலசப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களிலிருந்து சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று அண்ணாமலையாரை வழிபட்டனர். மேலும் தீர்த்தவாரி நடைபெற்ற செய்யாற்றில் ஆயிரக்கணக்கானவர்கள் தீர்த்தவாரி முடிந்தவுடன் புனித நீராடினர்.
இதையும் படிங்க: திருவாவடுதுறை ஆதீனத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்ற பட்டினப்பிரவேசம்