திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலுக்குச்சொந்தமான இடத்தில் ராஜகோபுரத்தின் தென்பகுதியில் உண்ணாமலை அம்மன் நிலையம் மற்றும் தென் ஒத்தவாடை தெரு பகுதியில், சுமார் 86 கடைகள் மாத வாடகை கட்டி, வியாபாரிகள் கடைகள் நடத்தி வருகின்றனர்.
பக்தர்களுக்குத் தேவையான மஞ்சள், குங்குமம், தாலி சரடு, விளக்குகள், சாமி சிலைகள், அண்ணாமலையார் படம் உள்ளிட்டப் பூஜை பொருட்கள், தின்பண்டங்கள், குழந்தைகளுக்குத் தேவையான விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்டவைகள் இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த வியாபாரிகள் சுமார் 26 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணாமலையார் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் வாடகை செலுத்தி வியாபாரம் செய்து வருகின்றனர். பௌர்ணமி நாட்கள், சித்ரா பௌர்ணமி, தீபத் திருவிழா போன்ற விழா காலங்களில் மாவட்ட நிர்வாகம் காவல்துறை மூலம் வழியை மறித்து, இரும்பு தடுப்பு அமைப்பதினால் திருவண்ணாமலைக்கு வரும் ஆன்மிகப்பக்தர்கள் தங்கள் கடைகளுக்கு வர முடியாத சூழல் நிலவுகிறது.
இதனால் தங்கள் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதுடன் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அண்ணாமலையார் ஆலய கடை கட்டட வாடகைதாரர்கள் தெரிவித்தனர். எனவே, தங்கள் கடைகளுக்கு முன்பு இரும்பு தடுப்பு அமைப்பதைத் தவிர்த்து, பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் தங்களை வியாபாரம் செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பாலாறு வெள்ளப்பெருக்கில் விளையாட்டு.. போலீஸ் விடுத்த வார்னிங்!