திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ராஜா. இவர் அசோக் நகர் 1-ஆவது தெருவில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் (ஏப். 8) ராஜாவின் மனைவி சந்தைக்குச் சென்று, மளிகைப் பொருள்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பியுள்ளார்.
முகக்கவசம் அணிந்து கொள்ளை
அப்போது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து, பின் தொடர்ந்து வந்த செயின் பறிப்புக் கொள்ளையன், அக்கம் பக்கம் யாரும் இல்லாத இடமாகப் பார்த்து இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, ஹெல்மெட்டை கழற்றி வைத்துவிட்டு பின்னர், முகக் கவசம் அணிந்து கொண்டு அவரைப் பின்தொடர்ந்துள்ளான்.
அப்போது, அந்த அடையாளம் தெரியாத நபர் ராஜாவுடைய மனைவி கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் தங்க சங்கிலியை, பறித்துக்கொண்டு சென்றான்.
இதையடுத்து ராஜாவின் மனைவி, கொள்ளையனை பிடிக்க முயன்ற போது, கொள்ளையன் மின்னல் வேகத்தில் ஓடி அங்கிருந்து, தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பிச்சென்றான்.
தீவிரமாகத் தேடிவரும் காவல் துறையினர்
இச்சம்பவம் குறித்து செய்வதறியாது இருந்த நிலையில் நேற்று (ஏப்.9) ராஜா, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, செயின் பறிப்புக் கொள்ளையில் ஈடுபட்ட முக கவசம் அணிந்து வந்த கொள்ளையனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சிசிடிவி காட்சிகள்
தொடர்ந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் கைப்பற்றி செயின் பறிப்புக் கொள்ளையனை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'செல்போன் கடையை உடைத்து பணம் - செல்போன் கொள்ளை'