திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ரோடு கரியமங்கலம் பகுதியில் வடிவேலு என்பவர் மளிகைக் கடை நடத்திவருகிறார்.
இவரின் கடையின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை திருடிச் சென்றனர். இதேபோல் அருகிலிருந்த மின்சார துறை அலுவலகத்திலும் திருட்டு நடந்தது.
இந்நிலையில் நேற்று (ஜூலை12) அதிகாலை அதேப் பகுதியில் பெங்களூரு சாலையில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் இருந்த உண்டியலின் பூட்டை உடைத்த அடையாளம் தெரியாத நபர்கள் அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்துவிட்டுச் சென்றுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, சுமார் இரண்டு கி.மீ., தூரத்தில் உள்ள நியூ சென்னை ரெஸ்டாரன்ட் பேக்கரியில் நான்கு இளைஞர்கள் டீ குடிப்பது போல் சென்று, பேக்கரியில் இருந்த கல்லாப்பெட்டியில் சாவியைத் திறந்து அதிலுள்ள ரொக்கப்பணம் சுமார் இருபது ஆயிரம் ரூபாயை கொள்ளையடிதுச் சென்றுள்ளனர்.
இது குறித்து பேக்கரியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்ததை கண்ட பேக்கரி பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் இது சம்பந்தமாக செங்கம் காவல் துறையினரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த காவல் துறையினர் பேக்கரியிலிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து கொள்ளையடித்துச் சென்ற இளைஞர்கள் யார் என்பதை விரைவில் கண்டுபிடித்து தருவதாக தெரிவித்து சென்றுள்ளனர்.
மேலும் செங்கம் பகுதியில் அடுத்தடுத்து இதுபோன்ற கொள்ளை சம்பவம் அரங்கேறிய தகவலால் செங்கம் மற்றும் ரோடு கரியமங்கலம் பகுதி மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு!