திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட விவசாயிகளின் நலன் கருதி அனைத்துத் துறை அதிகாரிகளையும் நேரடியாக ஒன்றிணைத்து விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வு காண்பதற்காக ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய் அன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்துவது வழக்கம்.
அதேபோல் நேற்றைய முன்தினம் (ஜூலை 04) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் விதை மணிலாவுடன் இடு பொருட்கள் 1550 ரூபாய் கொடுத்து வாங்கினால் மட்டுமே கிடைக்கும் என்று அதிகாரிகள் மிரட்டுவதாக விவசாயிகள் குறை கூறிக் கொண்டிருந்தனர்.
இதனை சிறிதும் பொருட்படுத்தாத தலைமை வகித்த மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர் நெடுநேரமாக அலைபேசியில் பேசியபடி இருந்ததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். மேலும், குறைகளைக் கேட்க வேண்டிய அதிகாரியே இது போன்று விவசாயிகளை அலட்சியப்படுத்துவது வேதனை அளிப்பதாகவும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளின் குறைகளைக் காது கொடுத்து கேட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இது ஒருபக்கம் இருக்க திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தில், தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் பாரம்பரிய நெல் விதை திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். குறிப்பாக நமது முன்னோர்கள் நடவு செய்த பாரம்பரிய நெல் வகைகள் விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தப்பட்டது.
நமது முன்னோர்கள் நடவு பாரம்பரிய நெல் விதைத் திருவிழா தமிழகத்தின் பல பகுதிகளில் பல்வேறு பாரம்பரிய நெல் ரகங்களுடன் நடைபெறும். இருந்த போதிலும், அந்தந்த வட்டாரப் பகுதிகளில் பயன்படுத்தும் பாரம்பரிய நெல் விதைகளை விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தும் வகையிலும், அவர்களும் நமது முன்னோர்கள் கடைப்பிடித்த பாரம்பரிய நெல் விதைகளை பயிரிடும் நோக்கிலும் இந்த பாரம்பரிய விதை நெல் திருவிழாவின் நோக்கமாக உள்ளது என இதன் ஒருங்கிணைப்பாளர் லெனின் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இயற்கை விவசாயத்தின் மூலமாக தயாரிக்கப்பட்ட பாரம்பரிய நெல் விதைகளான யானை கவுனி, குதிரைவாலி, குதிரை சம்பா, பவானி, இரச கடம், பாசஸ்மதி, கருப்பு கவுனி, கந்தசாலி, ரத்தசாலி, தூய மல்லி, பிசினி, கருடன் சம்பா, தங்க சம்பா, வாடன் சம்பா, கிச்சடி சம்பா, பால்முகி, அன்னமிளகி, கருவாச்சி, கருப்பு பசுமதி, ஆற்காடு கிச்சிலி சம்பா, வரகு புழுங்கல் அரிசி, மாப்பிள்ளை சம்பா உள்ளிட்ட பாரம்பரிய விதை நெல்கள் மற்றும் கம்பு, வரகு, கேழ்வரகு, குதிரைவாலி, சாமை, தினை, மக்காச்சோளம் உள்ளிட்ட சிறுதானியங்கள் மற்றும் அவற்றின் விதைகள் இந்த விதைத் திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த பாரம்பரிய ரக விதைகளை விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். மேலும் சிறுதானிய உணவுகளின் மூலம் செய்யப்பட்ட தின்பண்டங்களையும் விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி உண்டு சுவைத்தனர்.
இதையும் படிங்க: டிரிபிள்ஸ் சென்ற பெண்களை வீடியோ எடுத்த நபர்: செருப்பைக் கழற்றி தாக்கிய Rugged Girl