திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் செல்வகுமாரை ஆதரித்து மங்கலம் கிராமத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “செல்வகுமாரின் வெற்றி உறுதி. நீங்கள் அனைவரும் கடுமையாக உழைத்து மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்று உங்களை நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். செல்வகுமார் ஒரு மிகச் சிறந்த உழைப்பாளி.
அந்த வகையில் நமது கட்சியின் வளர்ச்சிக்காக, அயராது தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். எனவே இத்தொகுதியில் அனைவரும் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் மூன்று கூடை மாம்பழம் எனக்கு வர வேண்டும்” என்றார்.
இதைக்கேட்ட தொண்டர்கள் அதற்கு பதிலாக, “மூன்று கூடை இல்லை 10 கூடை தருகிறோம்” எனக் கூறினர். பின்னர் ராமதாஸ் தொடர்ந்து பேசுகையில் “சரி வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் எனக்கு பத்து கூடை மாம்பழம் கொண்டு வர வேண்டும்.
இரவு பகலாக அயராது பாடுபட்டு மாம்பழம் சின்னத்தை அறிமுகப்படுத்தி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும். இங்கு இளைஞர்கள் ஏராளமாக உள்ளார்கள். அந்த இளைஞர் சக்தியை பயன்படுத்தி வாக்கு சேகரித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும்” என்றார்.
இதைத்தொடர்ந்து கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றார். நிகழ்ச்சியில் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், மாவட்ட ஆவின் தலைவருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பாமகவை சேர்ந்த எதிரொலி மணியன், காளிதாஸ், ஜானகிராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: நெல்லையில் அமமுக வேட்பாளரின் வேட்புமனு தள்ளுபடி - அரசியல் சூழ்ச்சியா?