திருவண்ணாமலை திருக்கோயில் அடித்தளத்தில் மாதம்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசிப்பது வழக்கம்.
கரோனா வைரஸ் தொற்றால் தமிழ்நாட்டில் மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. மேலும் கரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஊரடங்கால் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை கிரிவலத்திற்கு பங்குனி மாதம் முதல் தொடர்ந்து நான்கு முறை தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை (ஆகஸ்ட் 2) பௌர்ணமி கிரிவலத்திற்கு அனுமதி கிடைக்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் இம்முறையும் பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி தடை விதித்துள்ளார். அதேவேளையில் வழக்கம்போல் பவுர்ணமி சிறப்பு வழிபாடுகள் மட்டும் நடைபெறும் என்று கூறியுள்ளார். இதையடுத்து தடையை மீறி பக்தர்கள் கிரிவலம் செல்லாமல் இருக்க கிரிவலப்பாதையில் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நூற்றாண்டு கால வரலாற்றில் கிரிவலத்திற்கு ஐந்தாவது முறையாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆடி வெள்ளிக்கிழமை: 19 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களில் அம்மனுக்கு அலங்காரம்