திருவண்ணாமலை: ஆரணி அடுத்த சேவூர்கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் (47). இவர் வடுகச்சாத்து கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார்.
இவர், 2016ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை டாஸ்மாக் கடையில் தினந்தோறும் வசூலாகும் மதுவிற்பனை பணத்தை சரிவர வங்கியில் செலுத்தாமல் முறைகேடு செய்ததாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்துள்ளன.
புகாரின் பேரில் 2018ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் செந்தில்குமார் தலைமையில், வடுகச்சாத்து டாஸ்மாக் கடையில் மாவட்ட நிர்வாகத்தினர் ஆய்வு செய்தனர். அப்போது, பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருந்தது தெரியவந்தது.
முறைகேடு செய்தவர் கைது
இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் அறிவழகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
தற்போது, அந்த முறைகேடு தொடர்பான முழு விவரங்களை அறிந்த குற்றப்பிரிவு காவல் துறையினர், அதனை அறிக்கையாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் செந்தில்குமாரிடம் ஒப்படைத்தனர். அதில், அறிவழகன் 46 லட்சம் ரூபாய் கையாடல் செய்திருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அறிவழகனை நேற்றிரவு (ஆக.25) கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்து 8 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரை திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின் பேரில் போளூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஆட்சியர் போல் பேசி ரூ.50 ஆயிரம் மோசடி முயற்சி - சைபர் கிரைம் விசாரணை