திருவண்ணாமலை: திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் நில அளவை பிரிவு பகுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் 1898-ஆம் ஆண்டு திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட்டது. ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்து 1989ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டமாக பிரிக்கப்பட்ட போது தற்போதைய வட்டாட்சியர் அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக செயல்பட்டு வந்தது.
பின்னர், கடந்த 2001-ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதனால் இந்த கட்டடம் மீண்டும் வட்டாட்சியர் அலுவலகமாக செயல்பட்டு வந்த நிலையில், நூற்றாண்டு பழமையான வட்டாட்சியர் அலுவலக கட்டடத்தின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு திடீரென உடைந்து கீழே விழுந்து உள்ளது. இதனால் மேற்கூரையின் கம்பிகள் வெளியே தெரியும் நிலை ஏற்பட்டு உள்ளது.
அதோடு மட்டும் அல்லாமல் வட்டாட்சியர் அலுவலக கட்டடத்தின் மேல் தண்ணீர் தேங்கி நிற்பதால் கட்டடத்தின் உள்பகுதியில் பாசி படர்ந்து விரிசல் ஏற்படும் நிலையில் இருப்பதாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க:தேனியில் வண்ண மின்னொளிகளால் ஜொலிக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்- செல்பி எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்!