திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன்பு 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்பிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மது பாட்டில்களில் கரும்புகளைச் சொருகி, "கரும்பு விலை கசக்குது, எரிசாராயம் விலை இனிக்குது" என்று கோஷமிட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது பேசிய உழவர் பேரவை தலைவர் புருஷோத்தமன், ”தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்துவருகிறது. எனவே, பாதுகாக்கப்பட்ட கரும்பு சாகுபடி மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவித்து மொலாசஸ் மூலம் எத்தனால், எரிசாராயம் தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். பிரதமர் அறிவிப்பின்படி சேலம், அமராவதி ஆலைகளில் எரிசாராயம் தயாரிக்கப்படுகிறது. எத்தனால் தயாரிக்க மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் ரூபாய் 2,500 கோடி நிலுவையில் உள்ளது.
தரணி சர்க்கரை ஆலையிலிருந்து 26 கோடி ரூபாய் நிலுவைத்தொகை உள்ளது. ஒரு டன் கரும்பில் 90 கிலோ சர்க்கரை, 45 கிலோ மொலாசஸ், 30 லிட்டர் எரிசாராயம் கிடைக்கிறது. இதை கார்ப்பரேட் கம்பெனிகள் தயாரித்து டாஸ்மாக் நிறுவனத்திற்குச் சப்ளை செய்து லாபம் பார்க்கின்றன. ஆகவே சர்க்கரை ஆலைகள் மதிப்பு கூட்டப்பட்ட எத்தனால், எரிசாராயம் தயாரித்தால் விவசாயிகளும் கரும்பு ஆலைகளும் லாபம் பெறலாம்.
மேலும் விவசாயிகளுக்குச் சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய நிலுவைத்தொகையை தராத பட்சத்தில், அந்த ஆலைகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.