திருவண்ணாமலை நகரின் பச்சையம்மன் கோயில் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதி நெருப்பு மலை அடிவாரத்தில் புள்ளிமான், மயில், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கோடை வெயிலால் வனப்பகுதியில் நீர் ஆதாரம் ஏதும் இல்லாததால், தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வனவிலங்குகள் வருகின்றன.
இவ்வாறு குடிநீர் தேடி பச்சையம்மன் கோயில் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த புள்ளி மான் ஒன்று, தெரு நாய்களால் கடித்து குதறி உடல் சிதறிய நிலையில் உயிரிழந்தது. மேலும், இந்த பெரிய புள்ளி மான் குடிநீர் தேடி வந்து வேலிகளில் சிக்கி நாய்களிடம் இருந்து தப்பிக்க முடியாமல் பல நாய்கள் கடித்ததால் உடல் சிதறி உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களை வேதனையடைச் செய்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வனத்துறையினர் வனப்பகுதியில் தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 7 புள்ளி மான்கள் தெரு நாய்களிடம் சிக்கி இறந்திருப்பது, வனத்துறையினர் வனவிலங்குகளை பாதுகாப்பதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையே காட்டுகிறது.
இதனிடையே, இறந்த புள்ளிமான்களுக்கு பொறுப்பேற்று சம்பந்தப்பட்ட வனத்துறையினர் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் எகிறி அடிக்கும் கரோனா: ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு