திருவண்ணாமலை: தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட பல தீர்மானங்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். அவ்வாறு நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் கேட்டு திருப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, அண்ணா பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட திருத்த மசோதா ஆகிய மசோதாக்கள் ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது.
தமிழக அரசால் அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களை ஆளுநர் திருப்பி வைத்ததால் சட்டமன்ற சிறப்பு கூட்ட கூட்டப்பட்டு மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்படும் எனத் தகவல் வெளியானது. இந்நிலையில் திருவண்ணாமலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நாளை மறுநாள் சட்டமன்ற சிறப்பு கூட்டம் கூட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம், "தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது அனுமதி அளிக்க ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநருக்கு அனுப்பிய சட்ட மசோதாக்கள் அனைத்தும் தற்போது திரும்பி வந்து விட்டதாக ஒரு தகவல் வந்துள்ளது. ஆகவே, இது பற்றி ஆலோசனை மேற்கொள்ள வருகின்ற சனிக்கிழமை 10:00 மணிக்கு சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது. திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்கள் நீட் விலக்கு உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் அனைத்தும் மீண்டும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்ப தமிழக அரசுக்கு தார்மீக உரிமை உள்ளது" என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.