திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு, கோயில் வளாகத்தில் உள்ள இரண்டாம் பிரகாரத்தில் மோட்ச தீபம் ஏற்றி ஆன்மா சாந்தியடைய வழிபாடு செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மோட்சதீபம் ஏற்றி இதனைத் தொடங்கி வைத்தார். இதில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உடனிருந்தார். மேலும் பின்னணிப் பாடகர்களான மனோ, எஸ்.பி.சைலஜா ஆகியோர் பக்திப் பாடல்கள் பாடி மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டனர்.
நகைச்சுவை நடிகர் மயில்சாமி, பின்னணிப் பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம், எஸ்.பி.சைலஜா, அவரது கணவர் சுபலேகா சுதாகர், உள்ளூர் கலைஞர்கள் எனப் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு எஸ்.பி.பி.யின் மறைவிற்கு மோட்ச தீபம் ஏற்றி ஆன்மா சாந்தி அடைய வேண்டினர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், ''கடந்த 2017ஆம் ஆண்டு கார்த்திகை தீபத்தன்று எஸ்பிபி இங்கு வந்து இரண்டு மணி நேரம் அமர்ந்து அண்ணாமலையார் திருக்கோயில் வளாகத்தில் பக்திப் பாடல்களைப் பாடி, பக்தர்களுக்கு பரவசமூட்டினார். சிவஸ்தலங்களில் அண்ணாமலையார் பற்றிய பக்திப் பாடல்களை அதிகமாகப் பாடியுள்ள ஒரே பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான். அண்ணாமலையார் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றுவது அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், அவருடைய ஆன்மா சாந்தி அடையும் விதமாகவும் அமையும்'' என்றார்.
எஸ்.பி.பி குடும்பத்தாரும், பின்னணிப் பாடகர்களும், இசைக்கலைஞர்களும் காரியம் முடிந்து மூன்றாம் நாள் எஸ்.பி.பிக்கு அண்ணாமலையார் திருக்கோயிலில் மோட்ச தீபம் ஏற்றி ஆன்மா சாந்தி அடைய வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருக்குறள் மட்டுமல்ல; எஸ்பிபி குரலும் மனிதர்களின் பொக்கிஷம்!