திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த திரேசாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வநாயகம். இவரது மனைவி மேரி (60), பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு வினோத் (38), சதீஷ் (36) என்ற 2 மகன்கள் உள்ளனர் . இவரது மகன் வினோத் திண்டிவனத்தில் தங்கி வேலை செய்து வருகிறார்.
கடந்த ஆண்டு மேரிக்கு சொந்தமான வீட்டு மனையை சதீஷின் மனைவி ரேவதி பெயருக்கு எழுதிவைத்ததாக கூறப்படுகிறது. இது கடந்த வாரம் வினோத்திற்கு தெரியவந்தது. இதையடுத்து வினோத் பத்திரப்பதிவு அலுவலகத்திற்குச் சென்று சரிபார்த்துள்ளார். அப்போது, தம்பி மனைவியான ரேவதி பெயரில் சொத்து எழுதப்பட்டிருப்பது தெரிந்தது.
இதனால், ஆத்திரமடைந்த வினோத் கடந்த 6 ஆம் தேதி தனது தாய் மேரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை கொலைச் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக நேற்று முன்தினம் (பிப். 07) காலை தனியார் பால் கொள் முதல் நிலையத்தில் விற்பனை செய்ய கறந்து வைத்திருந்த பாலில் வினோத் விஷம் கலந்துள்ளார்.
இதையறியாத மேரி வழக்கம் போல் தனக்கு தேவையான பாலை எடுத்து வைத்துக்கொண்டு மீதமுள்ள பாலை தனியார் கொள் முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றார். அங்கிருந்த ஜான் பால் ( 55 ) என்பவர் பால் கேனை திறந்து பார்த்தபோது பால் நீல நிறமாக இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர் பாலை பரிசோதித்ததில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது.
இது குறித்து ஜான் பால் தெள்ளார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் ஆய்வாளர் அல்லி ராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வினோத் சொத்து தகராறு காரணமாக தனது தாயை கொலை செய்ய பாலில் விஷம் கலந்தது தெரியவந்தது. இதையடுத்து, காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: முன்விரோதம் காரணமாக அரசுப் பேருந்து நடத்துநர் வெட்டிக்கொலை!