திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்த இருவரின் உடலுக்கு யாரும் உரிமை கோரவில்லை. இதனால் காவல் துறையினரின் அனுமதியோடு சமூக சேவகர் மணிமாறன் அந்த இருவரின் உடலுக்கும் இறுதிச் சடங்கு நடத்த திட்டமிட்டார்.
அதன்படி, திருவண்ணாமலை கிரிவலப்பாதை எமலிங்கம் அருகே உள்ள மயானத்தில் முறைப்படி ஆதரவற்ற இருவரின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மணிமாறன், "தமிழ்நாடு முழுவதும் இதுவரை ஆயிரத்து 108 ஆதரவற்றோர்களின் உடல்களை அடக்கம் செய்துள்ளேன். ஆனால், தற்போது கரோனா பாதிப்பால் இறக்கும் நோயாளிகளின் உடல்கள் அடக்கம் செய்யும்போது அவமரியாதையாக தூக்கி வீசப்படுகின்றன.
அந்த உடல்களையும் நல்லபடியாக நல்லடக்கம் செய்ய வேண்டும். எனவே, மாநில அரசு கரோனா பாதிப்பால் இறக்கும் நோயாளிகளின் உடல்களை தங்களிடம் கொடுத்தால் நல்லடக்கம் செய்யத் தயாராக இருக்கிறோம்" என்றார்.