திருவண்ணாமலை: வேலூர் விருபாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் மூர்த்தி (55). இவர் இன்று (ஆக. 13) தனது குடும்பத்துடன் செங்கம் அருகேயுள்ள குலதெய்வ கோயிலான புதூர் மாரியம்மன் கோயிலுக்கு காரில் சென்றுள்ளனர். அந்த, காரை மூர்த்தி மகன் சசிகுமார் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.
விபத்தில் 6 பேர் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென காரின் டயர் வெடித்தது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறு மாறாக ஓடி எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மூர்த்தி (55), பரிமளா(20), கோமதி (26), இராதிகா (45), முனியம்மாள்(65), 3 மாத பெண் குழந்தை உள்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுநர் சசிகுமார் (25), மாலதி (45), கமலா (55), பூர்ணிமா (21) ஆகிய நான்கு பேரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் நான்கு வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
போலீஸ் விசாரணை
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி, ஆரணி கோட்டாட்சியர் கவிதா உள்ளிட்ட காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த கோர விபத்தால் திருவண்ணாமலை - வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நூலிழையில் உயிர் பிழைத்த நபர்: திக்... திக்... காணொலி!