திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்திக்கு ஜமுனாமுத்தூர் மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் மேற்பார்வையில் போளூர் மதுவிலக்குப் பிரிவு காவல் துறையினர் ஜமுனாமுத்தூர் மலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அதில் ஜமுனாமுத்தூர் தாலுகாவில் குட்டகரை, ஜம்முடி, அத்திமூர், துன்பகாடு, ஜமுனாமரத்தூர், பள்ளகொல்லை, நீப்பலப்பட்டு ஆகிய பகுதிகளுக்கு சாராயம் கடத்தி வந்த முருகேசன், கமலக்கண்ணன், சாமிநாதன், உமாமூர்த்தி, ஏழுமலை, சரவணன் ஆகியோரைக் காவல் துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர். கள்ளச்சாராயம் கடத்தி வந்த ஆறு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.
விசாரணையில் இவர்கள் இருசக்கர வாகனங்களில் கறுப்பு நிற லாரி டியூப், வெள்ளை நிற கேன் ஆகியவை மூலம் தலா 30 லிட்டர் வீதம் மொத்தம் 150 லிட்டர் சாராயத்தைக் கடத்தியது தெரியவந்தது. கடத்துவற்குப் பயன்படுத்திய ஐந்து இருசக்கர வாகனங்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக்கில் துளையிட்டு மது பாட்டில்கள் திருட்டு