திருவண்ணாமலை: போளூர் அருகே 5 ஆம் வகுப்பு மாணவி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த சென்னைமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் புகழேந்தி (வயது 35). இவருடைய மனைவி கீதா. இவர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, பிரியதர்ஷினி என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் தாய் கீதா உயிரிழந்தார். பின்னர் தந்தை புகழேந்தி பிரியதர்ஷினியை வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், பிரியதர்ஷினி அருகிலுள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பிரியதர்ஷினி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் புகழேந்தி, உள்ளூரில் உள்ள மருத்துவர்களிடம் பிரியதர்ஷினிக்கு சிகிச்சை பார்த்துள்ளார்.
இதையும் படிங்க: மழை இல்லாததால் கருகிய பயிருடன் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட வந்த விவசாயிகளால் பரபரப்பு!
மேலும், பிரியதர்ஷினிக்கு நாளடைவில் உடல்நிலை மோசமானதாக கூறப்படுகிறது. உடனடியாக பிரியதர்ஷினியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் புகழேந்தி சிகிச்சைக்கு சேர்த்துள்ளார். இதனையடுத்து, மருத்துவமனையில், பிரியதர்ஷினியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் உள்ளதை உறுதி செய்து உள்ளனர். அதனைத்தொடர்ந்து, பிரியதர்ஷினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென நேற்று (அக். 30) காலையில் சிகிச்சை பலனின்றி பிரியதர்ஷினி உயிரிழந்தார். மாணவியின் உடல் தற்போது அவருடைய சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டு உள்ளது. 5ஆம் வகுப்பு பள்ளி மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: விளையாட்டு மைதானங்களில் மது விலக்கு வைக்கப்பட்டுள்ளதா? - தமிழக அரசு விளக்கம் அளிக்க நீதிமன்றம் ஆணை