திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயில் பின்புறம் அமைந்துள்ள 2668 அடி உயரமுள்ள மலைக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இந்நிலையில், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஜார்ஜ் என்பவர், வனத்துறை மற்றும் காவல்துறை அனுமதியின்றி ட்ரோன் கேமராவை பறக்கவிட்டுள்ளார்.
அப்போது மலையில் வழக்கமாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள், ட்ரோன் பறப்பது குறித்து, வனச்சரக அலுவலர் சீனிவாசனிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் மலை பகுதிக்கு சென்ற வனகாப்பாளர்கள் ரஷ்ய இளைஞர் ஜார்ஜை பிடித்து திருவண்ணாமலை மாவட்ட வனச்சாரக அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பிடிபட்டவர் வெளிநாட்டவர் என்பதால், அவரது பாஸ்போர்ட் குறித்தும், அவர் திருவண்ணாமலையில் தங்குவது குறித்து காவல்துறையில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதா என்றும் விசாரித்தனர். மேலும், இளைஞருடன் எத்தனை பேர் மலைக்கு சென்றனர்? எந்தெந்த இடங்களை புகைப்படம் எடுத்துள்ளார்கள்? யாருக்கேனும் புகைப்படங்கள் பகிர பட்டுள்ளதா? என்ற கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: போராட்டத்தில் இறங்கும் ஜாக்டோ-ஜியோ; தமிழக அரசுக்கு சிக்கல்!