திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் கொசப்பாளையம் ஜெயின் கோயில் தெருவைச் சேர்ந்த சங்கர், வெண்ணிலா தம்பதியினர். சங்கர், பட்டு ஜவுளி வியாபாரம் செய்து வருகின்றனர்.
மேலும் அதே பகுதியைச்சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்டோரிடம் ஏலச்சீட்டு நடத்துவதாகக்கூறி லட்சக்கணக்கான பணத்தை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சீட்டு எடுத்தவர்களிடம் பணம் வழங்காமல், அலைக்கழித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் சீட்டு எடுத்தவர்கள் சங்கர் வெண்ணிலா தம்பதியினரை, அவர்கள் வீட்டில் நேரில் சென்று பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டள்ளனர். அப்போது சங்கர், வெண்ணிலா தம்பதியினர் விரைவில் பணத்தை திரும்பத்தருவதாக உத்தரவாதம் அளித்துள்ளனர்.
பின்னர் திடீரென கடந்த 10 நாட்களாக வீட்டைப்பூட்டி விட்டு கணவன் - மனைவி இருவரும் தலைமறைவாகி விட்டதாகக்கூறி, பாதிக்கப்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்டோர் ஆரணி நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சீட்டுப்பண மோசடி செய்து தலைமறைவாகியுள்ள சங்கர், வெண்ணிலா இருவரையும் கண்டுபிடித்து அவர்களிடமிருந்து தங்களது பணத்தை மீட்டுத்தரும்படி புகார் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், ஆரணியில் 1 கோடி ரூபாய் வரை சீட்டுக்கட்டி பணத்தை இழந்தவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, புகார் மனு அளித்துள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வயலில் கிடந்த 1 கிலோ ஹெராயின்... மதிப்பு ரூ.7 கோடி... விவசாயி செய்த காரியம்...