திருவண்ணாமலையில் உள்ள ராமஜெயம் நகரில் சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். ஆனால், இங்கு போதுமான கழிவுநீர் வடிகால் வசதியும், சாலை வசதியும் அமைத்து தரப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு, புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 20 நாள்களுக்கு முன்பு அப்பகுதியில் சாலை, கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தித் தருவதாக ஒப்பந்ததாரர் மூலம் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் மண் சாலையாக இருந்ததை சமப்படுத்தி கழிவுநீர் கால்வாய் அமைக்க ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டியுள்ளனர்.
ஆனால், அதன்பிறகு அடுத்தக்கட்ட பணியில் ஈடுபடாமல் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டதால் நகரின் ஒட்டுமொத்த பகுதியிலிருந்தும் வரும் கழிவுநீரும், மழைநீரும் இந்தப் பள்ளமான பகுதியில் தேங்கி நின்றுகொள்கிறது. இது அப்பகுதியில் கொசு உற்பத்தியாக வழிவகுக்கிறது.
எனவே, போர்க்கால அடிப்படையில் அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தித் தருமாறு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு 30-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், நகராட்சிப் பொறியாளர் சமரசப்பேச்சுவார்த்தை நடத்தி கால்வாய், சாலை உடனடியாக அமைத்து தருவதாக உறுதியளித்ததன்பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.