திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிய உதவிடும் வகையில் 83 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.56,400 வீதம் ரூ.46,81,200 மதிப்பில் விலையில்லா இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டன.
மேலும் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, கரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்திடும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவைப்படும் மருத்துவ பொருள்கள் 83 நபர்களுக்கு ரூ.1,16,325 மதிப்பிலும், முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு படுத்த நிலையில் உள்ள 84 நபர்களுக்கு தண்ணீர் படுக்கை ரூ.4,800 வீதம் ரூ.4,03,200 மதிப்பிலும் வழங்கப்பட்டன.
அதேசமயம் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகத்தில் இருந்து 178 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு பெறப்பட்ட கையுறை, கிருமிநாசினி, முகக்கவசம், காலுறை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பெட்டி என மொத்தம் 262 நபர்களுக்கு ரூ.52,00,725 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார்.