கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் முருகேஷ் (51), சிவா (29). இவர்கள் இருவரும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வாத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இருவரும் வாத்துக்களை மேய்ப்பதற்காக அதே பகுதியைச் சேர்ந்த 10, 15 வயதுடைய இரண்டு சிறுவர்களை கொத்தடிமைகளாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலையின் கலசபாக்கம் அருகே வாத்துக்களை மேய்ப்பதற்காக சிறுவர்களை அழைத்து வந்துள்ளனர். இவர்களது கொடுமை தாங்க முடியாத சிறுவர்கள் உரிமையாளருக்குத் தெரியாமல், கலசபாக்கத்தில் இருந்து நடந்தே திருவண்ணாமலைக்கு தப்பித்து வந்துள்ளனர்.
கொத்தடிமை
இதனை அறிந்த வாத்தின் உரிமையாளர்கள் இருவரும் சிறுவர்களை இருசக்கர வாகனத்தில் தேடியுள்ளனர். அப்போது திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் நின்றிருந்த இரண்டு சிறுவர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனைக் கண்டவர்கள் அவர்களை பிடித்து விசாரித்துள்ளனர்.
காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
அப்போது சிறுவர்கள் கொத்தடிமைகளாக பயன்படுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிறுவர்கள் உள்பட 4 பேரையும் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்துனர். சிறுவர்களிடத்தில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலா்(பொறுப்பு) சித்ரபிரியா விசாரணை நடத்தினார்.
விசாரணையில் பெற்றோரிடம் பணம் கொடுத்துவிட்டு சிறுவர்களை கொத்தடிமைகளாக பயன்படுத்தி வாத்துகளை மேய்க்க வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து வாத்து உரிமையாளர்கள் இருவர் மீதும் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் சித்ரபிரியா இன்று (ஜன. 22) புகாரளித்தாா்.
அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடிய வாத்து உரிமையாளா்களான முருகேஷ், சிவா ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா். சிறுவா்கள் இருவரும் குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனா்.
இதையும் படிங்க: Facebook மூலம் நூதன முறையில் மோசடி - ஐடி ஊழியர் கைது