திருவண்ணாமலை: தனியார் 'கிளினிக்'கின் மரத்தடியில் கரோனா தொற்றுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த 11 பேரை மருத்துவ இணை இயக்குனர் அரசு மருத்துவமனைக்கு மாற்றினார்.
ஆரணி பழைய பேருந்து நிலையம் எதிரில் குழல் என்ற தனியார் கிளினிக், கரோனா நோய் பாதிக்கபட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்து வருகிறது. இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல், இவ்வளாகத்தில் உள்ள மரத்தடியில் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்தநிலையில் ஆரணி டவுன் அருணகிரி சத்திரம் பகுதியைச் சேர்ந்த, தயாளன் என்பவரின் மகன் ராஜா(40) கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதல் தவணையாக, 25 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளனர்.
பின்னர், ராஜாவிற்கு மூச்சு திணறல் அதிகமாக உள்ளதாகக் கூறி, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளனர். ஆக்ஸிஜன் உள்ள ஆம்புலன்ஸிற்குத் தனியாக 50 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கட்டிவிட்டு, ஆம்புலன்ஸில் அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியில் ராஜா உயிரிழந்தார்.
இதனால் அவரது உறவினர்கள், தனியார் மருத்துவமனை லட்சக் கணக்கில் பணத்தைப் பிடுங்கி கொண்டும், உயிரை காப்பாற்றவில்லை என்றும், கட்டிய பணத்திற்கு சரிவர ரசீது வழங்கவில்லை என்றும் சாதாரண நோட்டில் என்ன சிகிச்சை அளித்தனர் என்று குறிப்பிட்டு வழங்கியுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியருக்குப் புகார் மனு அளித்தனர்.
இதையடுத்து மருத்துவ பணி இணை இயக்குனர் கண்ணகி தலைமையிலான மருத்துவக் குழுவினர் நேற்று(மே.20) தனியார் கிளினிக்கில் ஆய்வு செய்தனர். அப்போது கிளினிக் அருகில் திறந்தவெளியில் 32 படுக்கைகள் அமைத்து கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.
உடனே அங்கு சிகிச்சைப் பெற்று வந்த 11 நோயாளிகள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். பின்னர், வருவாய்த்துறை அலுவலர்கள் கிளினிக்கைப் பூட்டி சீல் வைத்தனர்.
இதுகுறித்து மருத்துவ இணை இயக்குனர் கண்ணகியிடம் கேட்ட போது, "பொது மக்கள் உயிருக்கு பாதுகாப்பின்றி சட்ட விரோதமாக கரோனா சிகிச்சை அளித்ததால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கிளினிக் மருத்துவப் பணிகள் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: கரோனாவால் பலியான காவலர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு’ - அன்புமணி ராமதாஸ் வரவேற்பு