கரோனா அச்சம் காரணமாக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனையடுத்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி ஒரு வாரத்திற்கு முன்பு பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு வீட்டிற்கு ஒரு நபர் வெளியே செல்ல அடையாள அட்டைகளை இருவேறு வண்ணங்களில் வழங்கினார்.
திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாள்களில் செல்வதற்கு ஒரு வண்ண அடையாள அட்டையும், செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் வேறு ஒரு நிறம் கொண்ட அடையாள அட்டையும் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டது.
இருப்பினும் பொதுமக்கள் அந்த அடையாள அட்டையை எடுத்து வராமல் இருசக்கர வாகனங்களில் வெளியில் வந்த வண்ணம் இருந்துள்ளனர்.
இதனையடுத்து திருவண்ணாமலை நகர துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை அனைவரையும் அடையாள அட்டை உள்ளவர்கள், அத்தியாவசிய பணி செய்பவர்கள் மட்டுமே வர வேண்டும் மற்றவர்கள் வந்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறி அறிவுறுத்தி திருப்பி அனுப்பினார்.
மேலும் தேவையின்றி வெளியில் வருபவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம் என்று கை கூப்பி வணங்கி திருப்பி அனுப்பினர்.