திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 21 கரோனா தடுப்பு நடவடிக்கை வாகனங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு ஓட்டுநர், காவல் துறை அலுவலர், வருவாய்த்துறை அலுவலர், நகராட்சி அலுவலர் என மொத்தம் நான்கு பேர் மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் கரோனா தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருசக்கர வாகனம், ஆட்டோ, நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றில் பயணிப்போர் முகக்கவசம், தகுந்த இடைவெளி ஆகியவற்றை கடைபிடிக்காத நபர்களுக்கு ரூ.100 வீதம் அபராதம் விதித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை அடுத்த கீழ்நாச்சிப்பட்டு கிராமம் அருகே உள்ள திண்டிவனம் சாலை புறவழிச் சாலையில் இன்று (ஆகஸ்ட் 30) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கரோனா தடுப்பு குழுவினர், அவ்வழியாக மினி லாரியில் 50 பேர் எந்தவித தடுப்பு நடவடிக்கையும் பின்பற்றாமல் பயணித்த காரணத்திற்காக அவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதித்தனர். ஆட்டோவில் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் 10 பேரை ஏற்றிச் சென்றதால், மொத்தம் ரூ.6,000 அபராதம் வசூல் செய்யப்பட்டது.
ஏற்கனவே அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு ஒரு சீட்டிற்கு ஒரு பயணி வீதம் மொத்தம் 22 பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்து பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில். அது கடைபிடிக்க முடியாமல் கரோனா நோய்த் தொற்று அதிகரித்த நிலையில், பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், மினி லாரி, ஆட்டோவில் சுப நிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சிகளுக்கு அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்வதால் நோய்த் தொற்று மேலும் அதிகரிக்கும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.